மானியத்தில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்
வக்பு வாரியத்தில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கரவாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
வக்பு வாரியத்தில் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கரவாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டகலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மானியம்
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, சிவகங்கையில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனம் 1.1.2020-க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாகவும், வாகன விதிமுறை சட்டம் 1998-ன்படி பதிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம்- இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி
விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு இருத்தல் வேண்டும். ஒரு வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்படும்.
விலை பட்டியல்
வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும், மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க தேவையான படிவத்தினை சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்,
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story