குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி
திருவரங்குளத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திருவரங்குளம்
குடிநீர் பிரச்சினை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சியை சேர்ந்த தேத்தாம்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள குடிநீரை குடிப்பதன் மூலம் சிறுவர்-சிறுமிகளுக்கு பற்களில் கரை படிதல், பெரியவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறி இப்பகுதி பொதுமக்கள் கடந்த ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
அப்போது இருந்த அதிகாரிகள் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக கூறியதன்பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வாக்குறுதிப்படி இதுவரை ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியலுக்கு முயற்சி
குடிநீர் பிரச்சினையை தீர்க்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்றைய தினம் திருவரங்குளம் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து அதற்கான துண்டு பிரசுரமும் வினியோகம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் பொன்மலர் போராட்டக்குழுவினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதற்கான கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால் கூட்டத்தில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டக்குழுவினர் சாலை மறியலுக்கு ஆயத்தமாகினர்.
இதன்காரணமாக திருவரங்குளம் கடைவீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பெண்கள், காலிக் குடங்களுடன் சாலையோரத்தில் போராட்டம் செய்வதற்கு தயாராகினர். இதனால், போராட்டக்குழுவினரை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
உடன்பாடு
திருவரங்குளம் ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பிடாரி அம்மன் கோவில் திடலில் தாசில்தார் பொன்மலர், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாம சுந்தரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கமணி, போராட்டக்குழு தலைவர் கருப்பையா மற்றும் பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள் சுட்டிக்காட்டும் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து 15 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறியதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story