கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேச்சு
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.
பெங்களூரு:
கொரோனா 3-வது அலை
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்வது குறித்து டாக்டர்களுக்கான பயிற்சி முகாம் சுகாதாரத்துறை சார்பில் பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, அந்த பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கொரோனா 3-வது அலை தொடங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை கொரோனா தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சிகிச்சை
வயதானவர்கள், இளைஞர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை குழந்தைகளுக்கு அளிக்க முடியாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் குழந்தைகள நல டாக்டர்களை தான் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகள் நல டாக்டர்களின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அனைத்து டாக்டர்களுக்கும், குழந்தைகளுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதே போல் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இங்கு அளிக்கப்படும் பயிற்சியை வீடியோ மூலம் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த டாக்டர்களுக்கும் இந்த வீடியோவை வழங்க வேண்டும். டாக்டர் தேவிஷெட்டி தலைமையிலான நிபுணர் குழு, கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை அறிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளது.
டாக்டர்கள் நியமனம்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள கொரோனா வைரஸ் உருமாற்றம் அடையும். வளர்ந்த நாடுகளில் கூட இந்த தொற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன. கொரோனா முதல் அலையை நமது நாடு சிறப்பான முறையில் எதிர்கொண்டது.
மாநிலத்தில் 2-வது அலை தொடங்குவதற்கு முன்பு புதிதாக 4,000 டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். கேரளா, மராட்டிய மாநில எல்லையில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அங்கு இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நம்மை விட்டு முழுமையாக சென்றுவிடவில்லை. அதனால் நாம் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும்.
70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
பெங்களூரு நகர மாவட்டம் தடுப்பூசி வினியோகத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நான் பாராட்டுகிறேன். அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் பிரிவு தனியாக தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான மனித வளத்தை அரசு வழங்கியுள்ளது. சில நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கியுள்ளது.
விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டினால் நாமே கொரோனா 3-வது அலையை வரவேற்பது போல் ஆகிவிடும். மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வரை நாம் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாநிலத்தில் இதுவரை 2.40 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி 5 லட்சம் டோஸ் தடுப்பூசி ஒதுக்குமாறு பிரதமரிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு சுதாகர் பேசினார்.
Related Tags :
Next Story