கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மைசூரு:
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் குறிப்பாக குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களிலும் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணையில் தற்போது 90.60 அடி நீர் இருக்கிறது.
கபினி அணை
இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில், கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் அளவு அதிகரிக்கப்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284.80 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். தற்போது 2,280.60 அடி அளவிற்கு அணையில் நீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு காவிரியில்...
தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்துதான் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதாவது கபினி அணையில் இருந்து கபிலா ஆற்றில் திறந்து விடப்படும் நீரும், கே.ஆர்.ஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்திற்கு செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் இரு அணைகளில் இருந்தும் மொத்தம் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரத்து 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story