நெல்லை காண்டிராக்டர் கொலையில் தலைமறைவான 5 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்
நெல்லை காண்டிராக்டர் கொலை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளி உள்பட 5 பேரை பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை அருகே வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் கண்ணன் (வயது 35). கட்டிட காண்டிராக்டரான இவரை கடந்த 12-ந்தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்துமனோ கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்ணனின் உறவினரான ஜேக்கப் சம்பந்தப்பட்டு இருந்ததும், அதற்கு பழிக்குப்பழியாக கண்ணன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக வாகைக்குளத்தைச் சேர்ந்த நல்லதுரை, சங்கிலிபூதத்தான், குரு சச்சின், நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்த அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர்.
கண்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அவர்கள் திருப்பூரில் உள்ள உறவினர்களின் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story