காதல் தகராறில் வாலிபர்-இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு


காதல் தகராறில் வாலிபர்-இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 July 2021 5:48 AM IST (Updated: 17 July 2021 5:48 AM IST)
t-max-icont-min-icon

காதல் தகராறில் வாலிபர் மற்றும் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பங்காருபேட்டை கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 21). இவர், பூச்சத்திப்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

அதே கம்பெனியில் தீபிகா (21) என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பள்ளியில் படிக்கும்போதே பழக்கம் என தெரிகிறது. எதிர்பாராதவிதமாக ஒரே கம்பெனியில் இருவரும் வேலைக்கு சேர்ந்ததால் பள்ளி பழக்கம் தொடர்ந்து, காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

தீபிகாவை உதயகுமாரே மோட்டார்சைக்கிளில் கம்பெனியில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் உதயகுமார், கம்பெனியில் வேலை முடிந்து தீபிகாவை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர், உதயகுமாரை வழிமறித்து, தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் அவரது முகத்தில் 3 இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை தடுக்க முயன்ற தீபிகாவின் 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த உதயகுமார் மற்றும் தீபிகா இருவரும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

அங்கு உதயகுமாருக்கு முகத்தில் 11 தையலும், தீபிகாவுக்கு 2 கைகளிலும் சுமார் 9 தையலும் போடப்பட்டது. இதுகுறித்து உதயகுமார் அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், தீபிகா ஏற்கனவே திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (21) என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 2-ம் ஆண்டு படித்து வரும் ஸ்டீபனுக்கு மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற பழக்கம் ஏற்பட்டதால் அவருடனான காதலை தீபிகா கைவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலகிவிட்டார்.

இதற்கிடையில்தான் தன்னுடன் பள்ளியில் படித்த உதயகுமார் வேலை செய்யும் அதே கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு உதயகுமாருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

தான் காதலித்த பெண்ணை உதயகுமார் காதலிப்பதை அறிந்து ஆத்திரமடைந்த ஸ்டீபன், அவரை வழிமறித்து வெட்டியதும், அதை தடுக்க முயன்ற தீபிகாவுக்கும் வெட்டு விழுந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர் ஸ்டீபனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story