மணல்மேடு அருகே, மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்திய 3 பேர் கைது - 4 பேருக்கு வலைவீச்சு
மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணல்மேடு,
மணல்மேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் அமைத்து ஆற்றில் மணல் அள்ளப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது மணல் குவாரிகள் செயல்படாத நிலையில் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவது தொடர் கதையாக இருந்து வந்தது.
போலீசாரின் கடும் நடவடிக்கையால் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. எம்சாண்ட் பயன்பாடில் இருந்தாலும் ஆற்று மணல்தான் கட்டுமானத்திற்கு சிறந்தது என சொல்லப்படுவதால் அதனை அதிக விலை கொடுத்து வாங்கி வீடு ்கட்ட பொதுமக்கள் பலரும் முனைப்பு காட்டுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி சில நபர்கள் கொள்ளிட ஆற்றின் கரையோரம் சாக்குகளில் மணலை திருட்டு தனமாக அள்ளி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். 80 மூட்டை மணல் ஒரு யூனிட் என கணக்கிட்டு ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுபற்றிய ரகசிய தகவல் மணல்மேடு போலீசாருக்கு கிடைத்ததின்பேரில் விராலூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது சிமெண்டு சாக்குகளில் திருட்டுதனமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்்தி வந்த இழுப்பப்பட்டை சேர்ந்த 18 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (23), சித்தமல்லியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஜெகன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 4 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story