ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி பட்டதாரி வாலிபர் கைது


ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி  பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 July 2021 7:34 PM IST (Updated: 17 July 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில், ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகில் உள்ள மஞ்சளாறு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரம் எடுப்பதற்காக தேவதானப்பட்டியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாது என்பதால்அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார். அப்போது அந்த வாலிபர் ரூ.10 ஆயிரத்தை முருகேசனிடம் கொடுத்துவிட்டு மீதி ரூ.4 ஆயிரத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்றி கொண்டார். இதுகுறித்து முருகேசன் கேட்டபோது ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடிந்தது. மீதி ரூ.4 ஆயிரத்தை சிறிது நேரம் கழித்து வந்து எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறி சென்றுவிட்டார். 
இந்தநிலையில் முருகேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.4 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த மோசடி குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கைது
இந்தநிலையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் அந்த பகுதியில்தான் சுற்றி கொண்டு இருப்பார் என முருகேசன் முடிவு செய்து ரகசியமாக கண்காணித்தார். அப்போது அந்த வாலிபர் அதே ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். இதை முருகேசன் பார்த்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து தேவதானப்பட்டி போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தார். 
போலீஸ் விசாரணையில் அவர் தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டியை சேர்ந்த காமேஸ்வரன் (22) என்பதும், பட்டப்படிப்பு படித்து விட்டு கட்டிட தொழிலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும் தேவதானப்பட்டியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கும் கணேசன் என்பவர் தனது அண்ணனுக்கு பணம் போட ஏ.டி.எம் மையத்திற்கு வந்தபோது, காமேஸ்வரன் உதவுவதாக கூறி ரூ.1,500-யை தனது வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story