பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
பழனி முருகன் கோவிலில் உள்ள ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் உள்ள ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரோப்கார் சேவை
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் ரோப்காரில் மலைக்கோவிலுக்கு செல்லவே ஆர்வம் காட்டுகின்றனர்.
விரைவாகவும், இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது அதிகமாக காற்று வீசும் நேரங்களில் அதன் சேவை நிறுத்தப்படும்.
இதேபோல் பராமரிப்பு பணி காரணமாக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு 30 முதல் 45 நாட்கள் சேவை நிறுத்தப்படும். பெரும்பாலும் ஆண்டு பராமரிப்பு பணி என்பது பலத்த காற்றுள்ள ஆடி மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணி
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பணியில் ரோப்கார் நிலையத்தில் உள்ள பற்சக்கரங்களின் உறுதி தன்மை சோதிக்கப்படும். ஏதேனும் எந்திரங்கள் தேய்மானம் அடைந்திருந்தால் அவை புதிதாக மாற்றப்படும். மேலும் பழனி முருகன் கோவில் ரோப்காரில் பொருத்துவதற்காக புதிய பெட்டிகள், ரோப் (இரும்புவடம்) வந்துள்ளது. இதனால் பராமரிப்பு பணியின் போது புதிய பெட்டிகள், ரோப் ஆகியவை பொருத்தப்பட உள்ளன.
பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் வல்லுனர் குழு சார்பில் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ரோப்கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story