போடி அருகே பரபரப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் கேட்டு அரசு ஊழியரின் கணவர் காரில் கடத்தல் 2 பேர் கைது 5 பேருக்கு வலைவீச்சு
போடி அருகே ரூ3 கோடியே 50 லட்சம் கேட்டு அரசு ஊழியரின் கணவரை காரில் கடத்திய கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 5 பேரை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம், போடி மீனாட்சிபுரம் அருகே உள்ள பொட்டல்களம் கிராமம் ஹரேகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கவுர்மோகன்தாஸ் (வயது 48). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். இவருடைய மனைவி ஜெயகிருஷ்ணலட்சுமி (45) போடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலையில் ஜெயகிருஷ்ணலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு அவருடைய கணவர் இல்லை. அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த வேலையாட்களிடம் கேட்டபோது, கவுர்மோகன்தாஸ் மோட்டார் சைக்கிளில் வந்த போது அதன் மீது ஒரு கார் மோதியதாகவும், பின்னர் காரில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றதாகவும் கூறினர். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
ரூ.3½ கோடி கேட்டு மிரட்டல்
பின்னர், ஜெயகிருஷ்ணலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு அவருடைய கணவரின் செல்போன் எண்ணில் இருந்து ‘வாட்ஸ்-அப் கால்' மூலம் தொடர்பு கொண்டு ஒரு மர்ம நபர் பேசினார். அப்போது அந்த நபர், உடனடியாக ரூ.3½ கோடி கொடுத்தால் உன்னுடைய கணவரை உயிரோடு விடுவோம் என்று மிரட்டிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனால் பதறி போன ஜெயகிருஷ்ணலட்சுமி அதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுர்மோகன்தாசை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சரவணன் மற்றும் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கடத்தலுக்கு பயன்படுத்திய சிவப்பு நிற கார் பதிவாகி இருந்தது.
மானாமதுரையில் மீட்பு
அந்த காரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த கார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒரு வீட்டின் முன் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கார் நின்ற வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த வீட்டில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த கவுர்மோகன் தாசை தனிப்படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் அங்கு பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மானாமதுரையை சேர்ந்த குட்டி என்ற ராஜீவ்காந்தி (39), ராஜேந்திரன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர். இதில் ராஜேந்திரன் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் டிரைவர் ஆவார்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கவுர்மோகன்தாசை காரில் கடத்திச் செல்லும் போது அவருடைய வாயை பொத்தி, கை, கால்களை கட்டி கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தலில் 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாகவும், கடத்தலுக்கு 3 கார்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அந்த 3 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மற்ற 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் கடத்தப்பட்ட நபரை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தனிப்படையினரை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி பாராட்டினார்.
---------------
“பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ஆள்கடத்தல்”
டி.ஐ.ஜி. விஜயகுமாரி பேட்டி
============
போடி அருகே பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த கவுர்மோகன்தாஸ் என்பவரை நேற்று முன்தினம் ஒரு கும்பல் ரூ.3½ கோடி கேட்டு கடத்திச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவுர்மோகன்தாஸ் கடத்தப்பட்டது குறித்து அவருடைய மனைவி போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் புகார் கொடுத்தார். உடனடியாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தனிப்படையினரின் துரிதமான முயற்சியால் கடத்தப்பட்ட 12 மணி நேரத்துக்குள் கடத்தப்பட்ட நபர் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகிறோம்.
கொடுக்கல், வாங்கல்
கவுர்மோகன்தாசுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன நபர்கள் தான் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சினையில் இந்த கடத்தல் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கவுர்மோகன்தாசிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. முழுமையான விசாரணையில் தான் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தான் அணுக வேண்டும். தன்னிச்சையாக யாரும் இதுபோன்ற ஆள்கடத்தலில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுவது சட்டப்படி குற்றம். கடத்தப்பட்ட கவுர்மோகன்தாஸ் மீதும் 5 மோசடி மற்றும் குற்ற வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
=======
துப்பு துலக்கிய போலீஸ் சூப்பிரண்டு
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு சிவப்பு நிற காரில் கவுர்மோகன்தாசை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால், அந்த கார் பதிவு எண் மற்றும் காரின் முழு உருவம் வீடியோவில் பதிவாகவில்லை. சிவப்பு நிற கார் என்ற அடையாளத்தை வைத்து மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், ஆண்டிப்பட்டி கணவாய் சோதனை சாவடியில் மட்டும் நேற்று முன்தினம் இரவில் அதே மாதிரியான 17 கார்கள் கடந்து சென்றது தெரியவந்தது. இதனால், கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் எது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் அரைகுறையாக பதிவாகி இருந்த காரின் புகைப்படத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆய்வு செய்தார். இதில் அந்த காரின் டயர்கள், பின்பக்க கண்ணாடி ஆகியவற்றில் இருந்து சில அடையாளங்களை சேகரித்தார். அந்த அடையாளங்களை கொண்டு துப்புத்துலக்கிய போது கடத்தலில் ஈடுபட்ட காரை தனிப்படையினர் எளிதில் கண்டுபிடித்தனர். அதன்பிறகே காரின் பதிவு எண் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், காரின் உரிமையாளர் விவரம், கார் நிற்கும் இடம் போன்ற விவரங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
இரிடியம் மோசடியா?
கடத்தல் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜீவ்காந்தி, நூற்பாலை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இரிடியம் தருவதாக கூறி கவுர்மோகன்தாஸ் மற்றும் சிலர் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக இந்த கடத்தலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
Related Tags :
Next Story