எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
எட்டயபுரம்:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
ஆட்டுச்சந்தை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதையொட்டி ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் ஏராளமானவர்கள் முந்தின நாள் நள்ளிரவு முதலே குவிந்து விடுவர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டில் இருந்து வாரச்சந்தை நடைபெறவில்லை. பின்னர் வாரச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டாலும், கொரோனா தொற்று அதிகரித்ததால் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் எட்டயபுரம் வாரச்சந்தை கடந்த 2 வாரங்களாக செயல்படுகிறது.
பக்ரீத் பண்டிகை
இந்த நிலையில் வருகிற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஏராளமான இ்ஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். இதையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று விற்பனை களைகட்டியது. கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், கழுகுமலை, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பதற்காக லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் எட்டயபுரம் சந்தைக்கு கொண்டு வந்தனர்.
ஆடுகளை வாங்குவதற்காக நள்ளிரவில் இருந்தே வியாபாரிகளும் குவிந்தனர். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்றனர்.
விற்பனை மும்முரம்
அதிகாலை தொடங்கிய ஆட்டுச்சந்தை மதியம் 1 மணி வரையிலும் விறுவிறுப்பாக நடந்தது. செம்மறி ஆடு, வெள்ளாடு, பொட்டு ஆடு, மயிலை ஆடு போன்ற பல்வேறு வகையான ஆடுகளும் விற்பனையானது. ஏராளமானவர்கள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடந்தது. ஆடுகளின் எடையை பொறுத்து ஒவ்வொன்றும் தலா ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. பல ஆயிரக்கணக்கான ஆடுகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு நகர பஞ்சாயத்து பணியாளர்கள், சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story