விபத்தில் பலியான போலீஸ்காரர் உடலுக்கு, சூப்பிரண்டு ஜெயக்குமார் மரியாதை


விபத்தில் பலியான போலீஸ்காரர் உடலுக்கு, சூப்பிரண்டு ஜெயக்குமார் மரியாதை
x
தினத்தந்தி 17 July 2021 10:36 PM IST (Updated: 17 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விபத்தில் பலியான போலீஸ்காரர் உடலுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் விபத்தில் பலியான போலீஸ்காரர் உடலுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

விபத்தில் போலீஸ்காரர் சாவு

விளாத்திகுளம் தாலுகா சூரங்குடியை அடுத்த தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் கனகவேல். இவர் தூத்துக்குடி அருகே தருவைக்குளம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான தங்கம்மாள்புரத்திற்கு சென்றுவிட்டு பின்னர் மோட்டார்சைக்கிளில் தருவைக்குளம் போலீஸ் நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பாலார்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கனகவேல் பலியானார்.

போலீஸ் சூப்பிரண்டு மரியாதை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் கனகவேல் உடலுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று காவல்துறை மரியாதையுடன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை சூப்பிரண்டு கணேஷ், மாவட்ட ஆயுதப்படை துணை சூப்பிரண்டு கண்ணபிரான், தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் உள்பட போலீசார் பலர் அஞ்சலி செலுத்தினர்.
30 குண்டுகள் முழங்க தகனம்
பின்னர் அவரது உடல் கோவில்பட்டி இலுப்பையூரணி அருகே மறவர் காலணியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் கனகவேல் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் போலீசார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Next Story