காண்டூர் கால்வாயில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
காண்டூர் கால்வாயில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
பரம்பிக்குளத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கபாதை வழியாக சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டதால் கால்வாய் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து ஆழியாறு அணை பகுதியில் கட்டப்பட்டு வரும் வி.கே.பழனிசாமி கவுண்டர் மணிமண்டபம் கட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம்
தமிழக-கேரள அரசு இணைந்து 1958-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் உருவாக்கப்பட்டது. பரம்பிக்குளம் மலைப்பகுதிகளை குடைந்து சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து
மலைப்பகுதியையொட்டியும், மலையை குடைந்தும் 50 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டு உள்ள காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவின்படி ரூ.185 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கான்கீரிட் தளம் அமைக்கப்பட்டது.
மேலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மீதமுள்ளது. கால்வாயின் பக்கவாட்டில் மரங்களின் வேர் ஊடுருவல் காரணமாக கால்வாய் பழுதடைந்து உள்ளது.
இதனால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பாசனத்திற்கு எந்தவித தடையின்றி கொண்டு செல்லப்படும்.
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story