ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை மேலும் 3 பேர் கைது


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2021 10:56 PM IST (Updated: 17 July 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடை மேலும் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் ரொக்கம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்


கள்ளக்குறிச்சி

ரியல்எஸ்டேட் அதிபர்

கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் வீரமுத்து(வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று வீரமுத்து வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது மர்மநபர்கள் வீரமுத்துவின் வீட்டில் புகுந்து ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் 3 பவுன் நகைகள், வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவுசெய்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சின்னசேலம் பகுதியை சேர்ந்த அஜித், அம்பிகா, சீனிவாசன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் 3 பேருக்கு தொடர்பு

இந்த கொள்ளை வழக்கில் சேலம் வித்யா நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி(41), பொன்னம்மா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லெனின்(30), வாழப்பாடி பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் அசோக்குமார்(35) ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. 
அவர்களை பிடிக்க கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் குற்றப் பிரிவு போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. 

கைது

தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் சாமியார் மடம் பின்புறம் நின்று கொண்டிருந்த காயத்ரி, லெனின், அசோக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story