ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்த அலைமோதிய கூட்டம்
ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்படும் அளவை பொருத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி காந்தலில் நகராட்சி தாய், சேய் நல மையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. தடுப்பூசி போடுவதை அறிந்த பிற பகுதி மக்கள் நேற்று அங்கு படையெடுத்தனர். அவர்கள் டோக்கன் பெறாததால் தடுப்பூசி இல்லை என்று திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் மற்றும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து அருகே தொடக்க பள்ளியில் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுல்தான்பேட் பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்து முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த டோக்கன் பெற வரிசையில் முண்டியடித்து கொண்டு நின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
அலைமோதிய கூட்டம்
இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் நடுத்தர வயது முதல் பெரியவர்கள் வரை அருகே உள்ள நகராட்சி தாய் சேய் நல மையத்தில் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றனர்.
இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் தடுப்பூசி கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்து நடந்து செல்லாமல் ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தடுப்பூசி செலுத்துவதற்கு முன் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்துவத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு 600 பேர், வி.சி.காலனியில் 400 பேர் என மொத்தம் 1,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, டோக்கன் பெற்ற நபர்கள் தடுப்பூசி செலுத்த வந்தால் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். டோக்கன் வாங்குவதற்காக பலர் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story