முக கவசம் அணிவதில் தொடரும் அலட்சியம்
முக கவசம் அணிவதில் தொடரும் அலட்சியம்
போடிப்பட்டி:
முக கவசம் அணிவதில் கிராமப்புறங்களில் அலட்சியப்போக்கு தொடர்ந்து வருவதால் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முககவசமே ஆயுதம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கொடூர கொரோனா வைரசின் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உலக விஞ்ஞானிகளுக்கே சவாலான விஷயமாக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க, கொரோனா முதல் அலையின் போது நம்மிடம் இருந்த ஒரே ஆயுதம் முக கவசங்கள் தான்.
பொதுவெளியில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது என்று கொரோனா பரவலைத் தடுக்க அரசு வழிகாட்டியது. இதனைப் பின்பற்றி பரவலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் பொதுமக்களிடம் கொரோனா ஒழிந்து விட்டது போன்ற ஒரு மாயை உருவாகியது. இதனால் முககவசம் அணிவதில் அலட்சியம் காட்டினர். குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியாமல் ஊருக்குள் வலம் வந்தனர்.
அலட்சியப்போக்கு
இத்தகைய அலட்சியப்போக்கே கொரோனாவின் 2-வது அலைக்குக் காரணமாக இருந்தது என்று கூட சொல்லலாம். இதனால் கொரோனா பரவலின் 2-வது அலையில் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் அதிக அளவில் இருந்தது. தற்போது 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது போன்ற அலட்சியப்போக்கு நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.
மடத்துக்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் பலரும் முக கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றுகின்றனர். வழக்கம் போல கிராமத்து மரத்தடிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கதை பேசுகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். முக கவசம், தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களில் பயணிக்கின்றனர். கொரோனா பரவல் உச்சத்திலிருக்கும் போது உள்ளாட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத்துறையினர், போலீசார் என்று பலதரப்பினரும் கண்காணிப்புப்பணிகளை மேற்கொண்டனர்.
விழிப்புணர்வு தேவை
மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தனர். தற்போது இதுபோன்ற சோதனைகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இதனால் அலட்சியப்போக்கு தொடர்கிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை விரைவில் வரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த அலட்சியப்போக்கு 3-வது அலைக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பது போல ஆகிவிடும்.
எனவே ஊரடங்கில் எத்தனை தளர்வுகள் அறிவித்தாலும் கொரோனா உச்சத்தில் இருப்பது போன்ற மன நிலையிலேயே பொதுமக்களும், அதிகாரிகளும் செயல்பட வேண்டியது அவசியமாகும். எனவே வந்த பின் போராடுவதை விட வருமுன் காப்பது சிறந்தது என்ற அடிப்படையில் 3-வது அலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசுத்துறைகள் உடனடியாக தீவிரம் காட்ட வேண்டும். முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
Related Tags :
Next Story