மயிலாடுதுறை மாவட்டத்தில், மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம்
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீர்காழி:
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுருக்குமடி வலை
தமிழக அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டு ஆகியவை கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஏராளமான மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வந்தனர்.
இந்தநிலையில் அரசு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுக்கு இணங்க கடந்த சில மாதங்களாக சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் தொடர்ந்து அனுமதி வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிறுத்தி ைவப்பு
இதேபோல் மற்றொரு பிரிவினர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சீர்காழி பகுதியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களுடன் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனா்.
குடும்பத்துடன் உண்ணாவிரதம்
இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் மாவட்டம் முழுவதும் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமுல்லைவாசல் மீனவ கிராம தலைவர் காளிதாஸ் தலைமையில் மீனவ பஞ்சாயத்தார்கள், கிராம தலைவர்கள், மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாதுகாப்பு பணியில் ேபாலீசாா்
போராட்டத்தில் பங்கேற்ற மீனவ கிராம நிர்வாகிகள், தமிழக அரசு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்த ேவண்டும் என்பனவற்றை வலியுறுத்தி பேசினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் உத்தரவின்பேரில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டத்தின் மீனவ கிராமமான பூம்புகாரில் 75-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி நேற்று பூம்புகாரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பூம்புகார், தர்மகுளம் பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் துறைமுகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
பொறையாறு
இதேபோல் பொறையாறு அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாடி உள்ளிட்ட ஒருங்கிணைந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவ கிராமங்கள் சார்பில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும். அனைத்து வகையான மீன்பிடி தொழிலையும் முழுமையாக முறைப்படுத்த வேண்டும். ஆற்று முகத்துவாரத்தில் இருந்து 100 மீட்டருக்குள் மீன் பிடிப்பதற்கான தடை மற்றும் கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவிற்குள் எந்திரமயமாக்கப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிப்பதற்கான தடை ஆகியவற்றை பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே உள்ள கடலோர பகுதிகளான மடவாமேடு, கொட்டாய்மேடு, வெள்ளைமணல், தர்காஸ் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மடவாமேடு கிராம தலைவர் கலியமூர்த்தி தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவிலும் போராட்டம் தொடர்ந்தது
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடக்கோரி சீர்காழி தாசில்தார் சண்முகம், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பூம்புகார் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story