நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை நம்பியார் நகர் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கடந்த 15-ந் தேதி அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை சட்டம் 1983-ன் படி தடை செய்யப்பட்டுள்ள அனைத்து விதமான (கடல்தொழில்) வலை மற்றும் படகு தொழில்கள் போன்றவற்றின் தடையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தியும், மீன்பிடி சட்டத்தை மீறும் மீனவர்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை மற்றும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நம்பியார் நகரில் நேற்று முதல் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வராத மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், நம்பியார்நகர் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆரியநாட்டுதெரு கிராம மீனவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்களும், மீனவ பெண்களும் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டத்தால் நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு பகுதியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
Related Tags :
Next Story