விவசாயிகள்-விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்-விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்-விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுப்பணை கட்ட எதிர்ப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக கர்நாடக அரசு காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 65 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க சட்டத்திற்கு புறம்பாக அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பலரும் போராடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இதன் ஒருபகுதியாக மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் பழைய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
இதில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலைமணி, ஒன்றிய தலைவர் ராஜாங்கம், உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நீடாமங்கலம்
இதேபோல நீடாமங்கலம் தபால் நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பூசாந்திரம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி, விவசாய சங்க நிர்வாகி கைலாசம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டு கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story