நெல்லையில் ஒரே நாளில் 9,150 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9,150 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 84 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு வகையான தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பட்ட நாட்கள் இடைவெளியில் 2 தவணைகளாக பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி முதல்கட்டமாக செலுத்தப்பட்டது. தற்போது அந்த தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, 2-வது தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவில் போடப்படுகிறது. கோவேக்சின் தடுப்பூசி குறைவான அளவே போடப்படுகிறது. மாவட்டத்தில் முக்கூடல், கல்லூர், இடைகால், வைராவிகுளம், நாங்குநேரி ஆகிய 5 மையங்களில் மட்டுமே மொத்தம் 110 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்ற இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது. இதனால் அங்கு கோவேக்சின் 2-வது தவணை செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடுகிறவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில், எந்த மையத்துக்கு சென்று அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்பதையும் சேர்த்து அனுப்பினால், வீண் அலைச்சலின்றி பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் களக்காடு, சேரன்மாதேவி, பாப்பாக்குடி, மானூர், அம்பை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5,070 பேருக்கு நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் 2,950 பேருக்கும், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 1,130 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 9,150 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story