பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க சென்ற போது எடியூரப்பா 6 பைகளில் எடுத்து சென்றது என்ன? - குமாரசாமி கேள்வி
பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்திக்க சென்றபோது 6 பைகளில் எடியூரப்பா எடுத்து சென்றது என்ன? என்பது குறித்து குமாராசமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;-
6 பைகளில் இருந்தது என்ன?
முதல்-மந்திரி எடியூரப்பா தன்னுடைய மகன் விஜயேந்திராவுடன் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர்களுடன் மேலும் சிலரும் புறப்பட்டு சென்றுள்ளனர். எடியூரப்பா செல்லும் போது 6 பைகளை எடுத்து சென்றிருக்கிறார். அந்த பைகளில் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு பரிசு பொருட்களை எடுத்து சென்றாரா?.
அந்த பைகளில் வேறு என்ன பொருட்களை எடுத்து சென்றார்? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்த பைகளில் இருந்தது என்ன? என்பது குறித்து எடியூரப்பாவிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். டெல்லிக்கு செல்லும் அவர், 6 பைகளை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்தும் நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
வீடு, வீடாக சென்று பிரசாரம்
மாநிலத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடைபெற்று வருகிறது. அவற்றுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். கர்நாடகத்தில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்து கவர்னருக்கு, சுமலதா எம்.பி. புகார் அளித்திருப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா, டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் கர்நாடகத்திற்கு கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேகதாது மற்றும் மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக, கர்நாடத்திற்கு வந்திருந்த போது மத்திய ஜல்சகதித்துறை மந்திரி பேசியதற்கும், அவர் டெல்லி சென்ற போது, தனது கருத்தை மாற்றி பேசி இருப்பதையும் கவனித்தேன். அடுத்த ஆண்டு (2022) ஜனவரி முதல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்க, வீடு, வீடாக சென்று 5 முக்கிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும். இதன்மூலம் கட்சியை வளர்த்து, 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story