கலெக்டா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதி-பரபரப்பு
பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீக்குளிக்க முயற்சி
பூதப்பாண்டி இறச்சகுளத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவர் நேற்று தன் மனைவி சரஸ்வதியுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றபடி திடீரென தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனை வெளியே எடுத்து அதன் மூடியை கழற்றிக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த போலீசார் உடனே அங்கு வந்து சரஸ்வதி கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சரஸ்வதி கூறுகையில், ‘எனக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இதில் 2-வது மகன் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் 2-வது மகனின் பிள்ளைகள், நாங்கள் வசிக்கும் வீட்டை கேட்டு தகராறு செய்கிறார்கள். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பேரப்பிள்ளைகள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும் என் மீது மண்எண்ணெயையும் ஊற்றினார்கள். எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்றார்.
பரபரப்பு
இதைத் தொடா்ந்து 2 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பொதுவாக கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் அனைத்து பொதுமக்களின் உடமைகளையும் போலீசார் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுப்புவது வழக்கம். எனினும் மருதப்பன், சரஸ்வதி தம்பதியினர் மண்எண்ணெய் கேனை போலீசாருக்கு தெரியாமல் மறைத்து கொண்டு வந்துள்ளனர்.
தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story