ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் பலி


ராட்சத அலையால் படகு கவிழ்ந்து  மீனவர் பலி
x
தினத்தந்தி 18 July 2021 2:43 AM IST (Updated: 18 July 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை:
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நாட்டுப்படகு
மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் சர்ஜுன் (வயது 40). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த தாசன் மகன் ஆன்டனி பிரிட்டன் ராஜா (32), தேங்காப்பட்டணத்ைத சேர்ந்த வினித் (22), முள்ளூர்துறையை சேர்ந்த சைஜூ (29), இனையம்புத்தன்துறையை சேர்ந்த மரியதாசன் (50) உள்பட 7 பேர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க ெசன்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை 3 மணி அளவில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரம் பகுதியில் வந்த போது ஒரு ராட்சத அலை எழுந்து படகு மீது மோதியது. இதில் படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. அதில் இருந்த 7 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என குரல் எழுப்பினர்.
மீனவர் பலி
இதை அந்த வழியாக சென்ற மற்றொரு படகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக கடலில் குதித்து 6 மீனவர்களை பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆன்டனி பிரிட்டன் ராஜா மட்டும் ஆபத்தான நிலையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
அவரை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கரை வந்து சேருவதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறிந்து கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீனவர் உடலை கைப்பற்றி குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தொடரும் சோகம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் அலையால் படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதுவரை பல மீனவர்கள் இறந்துள்ளனர். எனவே முகத்துவார வடிவமைப்பை பாதுகாப்பான முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 
இந்த நிலையில் நேற்று மீண்டும் படகு கவிழ்ந்து மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story