மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கோரி விதானசவுதா நோக்கி நடைபயணம் - விவசாயிகள் அறிவிப்பு


மேகதாது திட்டத்தை நிறைவேற்ற கோரி விதானசவுதா நோக்கி நடைபயணம் - விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 July 2021 2:53 AM IST (Updated: 18 July 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்தை அரசு நிறைவேற்ற கோரி விதானசவுதா நோக்கி ராமநகரில் இருந்து 3-ந்தேதி நடைபயணம் தொடங்குவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு:
  
மேகதாது அணை விவகாரம்

  ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்று தமிழகம் மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

  மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். அதுபோல மேகதாது கட்ட அனுமதி வழங்க கூடாது என்று தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்து கட்சி குழுவும் நேற்று முன்தினம் மத்திய ஜல்சக்தித் துறை மந்திரி கஜேந்திர செகாவத்திடம் வலியுறுத்தியுது. இதனால் இந்த மேகதாது அணை பிரச்சினை தற்போது விசுவரூபம் எடுத்து உள்ளது.

பாதயாத்திரை செல்ல...

  இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பாதயாத்திரை செல்ல முடிவு செய்து உள்ளனர். அதாவது மேகதாதுவில் இருந்து பெங்களூரு விதான சவுதா வரை ராமநகர் மாவட்ட விவசாயிகள், மேகதாது அணை திட்ட குழுவினர் நடைபயணமாக செல்ல உள்ளனர்.

  ஆகஸ்டு 3-ந் தேதி மேகதாதுவில் இருந்து ஊர்வலமாக புறப்படும் விவசாயிகள் 5 நாட்கள் நடைபயணமாக 7-ந் தேதி பெங்களூருவுக்கு செல்கிறார்கள். அங்கு முதல்-மந்திரியை சந்தித்து மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இதற்கிடையே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கான அளவீடு பணிகளை ராமநகர் மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.

Next Story