மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுத்து போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
குப்பைகள், மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுத்து போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவ கழிவுகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியின் ஒரு பகுதியான மதுரம் நகரில் அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருவதால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.மேலும் போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுத்து அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ.கணபதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று நேற்று போரூர் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போரூர் ஏரியில் மண்ணை கொட்டி நிரப்பி தூர்த்துவிட நினைத்தார்கள். இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தார்கள். இதனால் ஏரியில் மண் கொட்டி நிரப்பப்படுவது நிறுத்தப்பட்டது.
முழுமையாக பாதுகாக்கப்படும்
போரூர் ஏரியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரி முழுமையாக பாதுகாக்கப்படும். முதல் கட்டமாக போரூர் ஏரிக்குள் வெளியில் இருந்து குப்பை கொட்ட வரும் வாகனங்களை தடுப்பதற்காக பாதையை அடைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். உள்ளாட்சி நிர்வாகம், தனியார் ஆஸ்பத்திரி என யாரும் இங்கு குப்பை கொட்டக்கூடாது. அத்துமீறி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story