இந்திய கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வந்தது


இந்திய கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வந்தது
x
தினத்தந்தி 18 July 2021 5:21 PM IST (Updated: 18 July 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

வான்வழி ஏவுகணைகள், கடலில் வரும் கப்பல்களை தாக்கி அழிக்கும் இந்திய கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது.

தூத்துக்குடி:
வான்வழி ஏவுகணைகள், கடலில் வரும் கப்பல்களை தாக்கி அழிக்கும் இந்திய கடற்படையின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது.

பாதுகாப்பு 

தமிழகம் நீண்ட கடற்கரை எல்லையை கொண்ட மாநிலமாக இருப்பதால் எல்லை பிரச்சினைகள் இன்றி பாதுகாப்பாக திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவின் தலையில் இருந்து கொண்டு தொல்லை கொடுத்து வரும் சீனா,
காலடியிலும் சுரண்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் எவ்வித தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் தமிழக கடற்கரையோரத்தை பலப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்படை தளம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னையில் கடலோர காவல்படை தளமும் இயங்கி வருகிறது. இவர்களின் பாதுகாப்பு ரோந்து கப்பல்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கடற்படை தளம்

மேலும் அணுசக்தி துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், கனநீர் ஆலை உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடற்படை தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று விமான நிலையம் அருகே விமானப்படை விமானம், கடலோர காவல்படை கண்காணிப்பு விமானங்கள் தரையிறங்குவதற்கு வசதியாக விமான ஓடுதளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நீர்மூழ்கி கப்பல்

இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை தாங்கிய ‘ஐ.என்.எஸ்.சிந்துசாஸ்திரா’ என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தது. இந்த கப்பல் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த கப்பல் 72.6 மீட்டர் நீளமும், 9.9 மீட்டர் அகலமும் கொண்டது. கடலுக்கு மேல் பகுதியில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்திலும், தண்ணீருக்கு அடியில் மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லக்கூடியது. இந்த கப்பலில் 13 கடற்படை அதிகாரிகள் உள்பட 52 வீரர்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.  கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் இதுவாகும். 
 
இந்த நீர்மூழ்கி கப்பலில் வானில் இருந்து வரக்கூடிய ஏவுகணைகளை தடுத்தல், கடலில் மேற்பரப்பில் உள்ள கப்பல்களை தாக்கி அழித்தல், கடலுக்கு அடியில் வரக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களை அழித்தல் ஆகியவற்றுக்கான அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

பராமரிப்பு

இந்த கப்பலில் உள்ள சிறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும், உணவு மற்றும் டீசல் உள்ளிட்டவை நிரப்புவதற்காகவும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடிக்கு வந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story