வாலிபர் வெட்டிக்கொலை


வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 18 July 2021 6:04 PM IST (Updated: 18 July 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே செல்போன் அழைப்பை ஏற்று வெளியே சென்ற வாலிபர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யபட்டார். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மூலனூர்
தாராபுரம் அருகே செல்போன் அழைப்பை ஏற்று வெளியே சென்ற வாலிபர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யபட்டார். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து உப்பாறு செல்லும் சாலையில் மடத்துப்பாளையம் சாலையோரம் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாகவும், அவர் உடல் கிடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மோட்டார்சைக்கிள் ஒன்று அனாதையாக நிற்பதாகவும் தாராபுரம் போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். 
உடனே தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன் தாராபுரம், திருவானந்தனம் மூலனூர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது  அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலில் பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் ஆக்ரோஷத்தில் வெட்டிக்கொன்று இருப்பது தெரியவந்தது. அது மட்டுமல்ல மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கும், வாலிபர் பிணமாக கிடந்த இடத்திற்கும் இடைப்பட்ட தூரம் வரை சாலையில் ரத்தம் சிந்தி இருந்தது. 
வெட்டிக்கொலை
இதையடுத்து  கொலையானவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் வீராட்சிமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி  நாகராஜின் மகன் கோபிநாத் வயது 21 என்பது தெரியவந்தது. தாராபுரம்-திண்டுக்கல் பிரிவில் உள்ள அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் உப்பாறு அணை பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் அவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே தனது பெற்றோரிடம் கூறி விட்டு மீண்டும் கோபிநாத் மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 
இதையடுத்து போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய், கோபிநாத் உடல் கிடந்த இடத்தில் இருந்து தாராபுரம் ரோடு நோக்கி ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் கோபிநாத் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  கோபிநாத்தை பின் தொடர்ந்த கொலையாளிகள், கோபிநாத்தை அரிவாளால் முதலில் வெட்டி  உள்ளனர். உடனே  அவர்களிடம் தப்பிக்க கோபிநாத் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் சாலை முழுவதும் ரத்தம் சிந்தி உள்ளது. ஆனாலும் பின் தொடர்ந்த கொலையாளிகள் அவரை  ஓடஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 
கோபிநாத் எதற்காக கொலை செய்யப்பட்டார்  முன்விரோதம் காரணமா அல்லது காதல்  பிரச்சினையா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தாராபுரத்தில் இருந்து உப்பாறு செல்லும் சாலையில் ஆங்காங்கே வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளதா?  என்று  போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொலை குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். 
சாலை மறியல்
இதற்கிடையில்  கோபிநாத்தின் பெற்றோரும், உறவினர்களும்  தாராபுரம் விரைந்து வந்து கோபிநாத்தின் உடலை பெற்றொரிடம் காட்டாமல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரியும்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடந்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த கொலையால் தாராபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


Next Story