கால்வாயில் விழுந்துள்ள கற்கள்
காண்டூர் கால்வாயில் விழுந்து உள்ள கற்கள் அகற்றப்படுமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தளி
காண்டூர் கால்வாயில் விழுந்து உள்ள கற்கள் அகற்றப்படுமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காண்டூர் கால்வாய்
பி.ஏ.பி. திட்டத்தின் உயிர் நாடியாகவும் வனவிலங்குகளின் அட்சய பாத்திரமாகவும் காண்டூர் கால்வாய் விளங்கி வருகிறது. அப்பர்நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிகுளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு உள்ளிட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தை அடைகிறது.
அதன் பின்பு காண்டூர் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதி வழியாக 49.300 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. ஆண்டுதோறும் ஜூலை 15 முதல் அடுத்த ஆண்டு மே 15 வரையிலும் 10 மாதங்கள் தண்ணீர் வரத்து இருக்கும் வகையிலும் 1150 கனஅடி தண்ணீரை சுமந்து செல்லும் வகையிலும் காண்டூர் கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு இல்லை
இந்த கால்வாயின் தயவால் பி.ஏ.பி. பாசனத்திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இவற்றில் அம்மாபட்டிகுளம், செங்குளம், பெரியகுளம், ஒட்டுகுளம் உள்ளிட்ட ஏழுகுளங்கள் பாசனமும் அடங்கும். அதுதவிர உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், கொமரலிங்கம், குடிமங்கலம் மற்றும்பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருவதற்கு காண்டூர் கால்வாயின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் கால்வாயில் முறையான பராமரிப்பு மற்றும் அதில் விழுந்துள்ள பாறைகள், கற்கள், பக்கவாட்டு சுவரில் முளைத்துள்ள செடிகள் அகற்றப்படாதது போன்ற காரணங்களால் காண்டூர்கால்வாயின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது.
தண்ணீர் கொண்டுவருவதில் சிக்கல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய ஆதாரங்களில் காண்டூர்கால்வாய் பங்கு முக்கியமானதாகும். மழைப்பொழிவால் நீர்வரத்து ஏற்பட்டு பிஏபி தொகுப்பு அணைகள் நிறைந்த பின்பு திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதைக்கொண்டே சுழற்சி முறையில் நான்கு மண்டலங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த சூழலில் திருமூர்த்தி அணை முழுமையாக தூர்வாரப்படாதது காண்டூர்கால்வாய் முறையாக பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களினால் பாசன நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்படாத சூழல் உள்ளது. காண்டூர் கால்வாயில் வனப்பகுதியின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் அடித்து வரப்படுகின்ற மண், பாறைகள் அதில் விழுந்து விடுகிறது. அப்போது பக்கவாட்டு சுவர்களும் சேதமடைகிறது. அதை சீரமைப்பதற்கும் விழுந்த பாறைகளை அகற்றுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
பாறைகள் அகற்றப்படுமா
இதனால் ஆங்காங்கே கற்களும், பாறைகளும் கால்வாயில் நிறைந்த காணப்படுவதுடன் பக்கவாட்டு சுவர்களின் சேதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் முழுமையான அளவு தண்ணீர் கொண்டுவர முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக அணை விரைவில் நிரம்பும் வாய்ப்புகள் ஏற்படுவதில்லை. அதைத்தொடர்ந்து கால்வாயில் விழுந்துள்ள பாறைகளையும் சேதமடைந்த பக்கவாட்டு சுவரையும் சீரமைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியவுடன் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கு முன்பாக கால்வாயில் விழுந்துள்ள பாறைகள் மற்றும் ஆங்காங்கே தேங்கியுள்ள கல்குவியல்களை அகற்றுவதுடன் பரவலாக சேதமடைந்துள்ள பக்கவாட்டு சுவர்களையும் அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். இதனால் கால்வாயில் முழுமையான கொள்ளளவுடன் தண்ணீரை கொண்டு வருவதற்கு இயலும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு சாகுபடி பணிகளையும் தொடர இயலும்.இவ்வாறு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story