பேக்கரி மாஸ்டர் கைது


பேக்கரி மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 18 July 2021 6:28 PM IST (Updated: 18 July 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து விலை உயர்ந்த மதுபானங்களை குடித்த பேக்கரி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.4 லட்சம் தப்பியது.

அவினாசி
அவினாசியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து விலை உயர்ந்த மதுபானங்களை குடித்த பேக்கரி மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.4 லட்சம் தப்பியது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
டாஸ்மாக் கடை
திருப்பூர் மாவட்டம் அவினாசி  கோவை மெயின் ரோட்டில் கால்நடை மருத்துவமனை எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். 
இதற்கிடையில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் குமார் கடையின் பாதுகாப்பு கருதி தினசரி இரவு நேரத்தில் டாஸ்மாக் கடை அருகே வந்து போவது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலை 2 மணியளவில் அங்கு வந்துள்ளார். அப்போது கடைக்குள் விளக்கு எரிந்த நிலையில் ஆள் இருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து கடை அருகில் சென்று பார்த்தபோது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதேசமயத்தில் கதவை உள்புறமாக தாழ்போட்டு எதையோ உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. 
திருட முயற்சி
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடைக்குள் அதிக அளவில் ஆட்கள் இருப்பார்களோ? என்று எண்ணி கடையின் மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்ததும் கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அவினாசி போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். உடனே போலீசாரும் அங்கு வந்தனர். அப்போது டாஸ்மாக் கடைக்குள் இருந்து மதுபோதையில் தள்ளாடியபடி கதவை திறந்து கொண்டு ஒரு ஆசாமி வெளியே வந்துள்ளார். 
இதையடுத்து போலீசார் கடைக்குள் சென்று பார்த்தபோது விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் காலியாக இருப்பதும், அவற்றை திருடி அந்த ஆசாமி குடித்து இருப்பதும், காலியான மதுபாட்டில்களை அங்கேயே போட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் டாஸ்மாக் கடை மேஜை டிராயரில் இருந்த ரூ.950ஐ திருடியுள்ளார். அதன்பின்னர் அங்கிருந்த லாக்கரை கல்லால் உடைக்க முயன்றதும் தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த கோபால் மகன் ரித்தீஸ் வயது 34 என்பதும், தற்போது அவினாசியில் தங்கி பேக்கரியில் கேக் மாஸ்டராக வேலை பார்த்ததும் தெரியவந்தது. 
பேக்கரி மாஸ்டர் கைது
 இவர் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் செலவுக்கு பணம் இல்லாதததால் டாஸ்மாக் கடையின் பூட்டை கல்லால் உடைத்து திறந்து கடைக்குள் சென்று போதை தலைக்கேறும்வரை விலை உயர்ந்த மதுபானத்தை குடித்துவிட்டு அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றது தெரியவந்தது. ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.4 லட்சம் தப்பியது. இதையடுத்து ரித்தீசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.950ஐ பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அவினாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story