மீன்பிடி திருவிழாவில் குவிந்த கிராம மக்கள்
திண்டுக்கல் அருகே மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் :
மீன்பிடி திருவிழா
திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நல்லாம்பட்டியில் ராஜாகுளம் உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு, கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் ராஜாகுளம் நிரம்பியது.
இந்த குளத்தில் வளரும் மீன்களை கிராம மக்களே பிடித்து, சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒற்றுமை, சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் குளத்தில் மீன்பிடி திருவிழாவை பராம்பரியமாக கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்கள் ஒன்று கூடி, குளத்தில் மீன்பிடிப்பதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்தநிலையில் ராஜாகுளத்தில் மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது.
வலைகளில் சிக்கிய மீன்கள்
இதையொட்டி அதிகாலையிலேயே கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் ராஜாகுளத்தில் உள்ள கன்னிமார், முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள், கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து குளத்துக்கரையில் தயாராக நின்ற ஏராளமான பொதுமக்கள், குளத்தின் நான்கு திசைகளிலும் இருந்து ஒரே நேரத்தில் மீன் பிடிக்க இறங்கினர். இதனால் மீன்பிடி திருவிழா களை கட்டியது.
தண்ணீருக்குள் இருந்து மீன்கள் வெளியே துள்ளி குதித்தன.
பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பல்வேறு வகையான வலைகளை பயன்படுத்தி மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, மிருகால் கெண்டை உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றைப் பொதுமக்கள் உற்சாகமாக பிடித்து மகிழ்ந்தனர்.
இந்த மீன்களை விற்பனை செய்வதை தெய்வ குற்றமாக கிராம மக்கள் கருதுகின்றனர். இதனால் மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து சாப்பிட கொண்டு சென்றனர்.
தி.பாறைப்பட்டி
இதேபோல் கோபால்பட்டியை அடுத்த தி.பாறைப்பட்டியில் உள்ள தைலா குளத்தில் நேற்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து பாறைப்பட்டி, மந்தநாயக்கன்பட்டி, மணியகாரன்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலையில் குளத்தில் வந்து குவிந்தனர்.
கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளபோது குளத்தில் மீன்பிடிக்க சமூக இடைவெளியின்றி கூட்டமாக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்கள் வலை, சாக்குபைகள் ஆகியவை மூலம் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் ஜிலேபி, கட்லா, விறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் வலையில் சிக்கின. வலைகளில் சிக்கிய ஏராளமான மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story