மேல்மலையனூரில் மேற்கூரையை பிரித்து மருந்துக்கடையில் ரூ.97 ஆயிரம் கொள்ளை விலை உயர்ந்த மருந்துகளையும் அள்ளிச்சென்றனர்
மேல்மலையனூரில் மருந்துக்கடையில் ரூ.97 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், விலை உயர்ந்த மருந்துகளையும் அள்ளிச்சென்றனர்.
மேல்மலையனூர்,
கொள்ளை
மேல்மலையனூரை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 45). இவர் அங்குள்ள கடைவீதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் துரைமுருகன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்தார். அப்போது கடையின் மேற்கூரை தகர ஷீட்டுகள் பிரிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.97 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டு மற்றும் அங்கு அடுக்கி வைத்திருந்த விலை உயர்ந்த மருந்துகளை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடித்ததும், விலை உயர்ந்த மருந்துகளை அள்ளிச்சென்றதும் தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
வணிகர்களிடையே அச்சம்
இது பற்றி தகவல் அறிந்ததும் வளத்தி போலீசார் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த மருந்துக்கடையை பார்வையிட்டனர். பணம் மற்றும் மருந்துகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story