மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்


மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 July 2021 11:24 PM IST (Updated: 18 July 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்,

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் கொள்ளளவு 125 சி.சி. சக்திக்கு மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998-ன் படி பதிவு செய்திருக்கவும் வேண்டும். மேலும் வாங்கவுள்ள இருசக்கர வாகனம் 1.1.2020-ம் ஆண்டுக்கு பின்னர் தயார் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25 ஆயிரம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், 18 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவராகவும், விண்ணப்பிக்கும்போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான எல்.எல்.ஆர். சான்றிதழ் பெற்றிருக்கவும் வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு (தேர்ச்சி அல்லது தோல்வி) ஆகும். மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வருகிற 28-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story