அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை- பணம் திருட்டு


அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 July 2021 11:28 PM IST (Updated: 18 July 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை- பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, பத்திரங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் 4-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சக்தி செல்வராஜ்(வயது 65). இவருடைய மனைவி கலாவதி. இவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள தங்களுடைய மகள் வீட்டிற்கு சென்றனர். இதேபோல் அப்பகுதியில் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்த பவுனம்மாள்(42)- தனசேகர் தம்பதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் நடைபெற்ற பவுனம்மாளின் அக்காள் மகன் திருமணத்திற்காக சென்றனர்.

இந்நிலையில் வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றனர். இதில் பவுனம்மாள் வீட்டில் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம், 2 மோதிரங்கள் சேர்ந்து 2 கிராம் தங்க நகை, ஏ.டி.எம். கார்டு, வீடு மற்றும் நிலத்து பத்திரம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். சக்தி செல்வராஜ் வீட்டில் கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 கிராம் நகைைய திருடிச்சென்றுள்ளனர். அதில் இருந்த ரூ.4 ஆயிரத்தை மர்ம நபர்கள் கவனிக்காததால் அந்த பணம் தப்பியது.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகார்களின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையிலான போலீசார், திருட்டு நடந்த வீடுகளுக்கு வந்து பார்வையிட்டனர். அரியலூர் கைரேகை நிபுணர்கள் சத்யராஜ், துர்க்காதேவி ஆகியோர் அந்த வீடுகளில் இருந்து கைரேகைகளை சேகரித்தனர்.
போலீஸ் மோப்ப நாய் ‘டிக்சி’ வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய், பவுனம்மாள் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி 6-வது குறுக்குத் தெருவில் இருந்து 4-வது குறுக்கு தெருவிற்கு வந்து, மீண்டும் வீதியில் ஓடி 6-வது குறுக்குத்தெருவை அடைந்து அங்கிருந்து செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள பழைய பஞ்சு நூற்பாலைக்கு சென்று படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார், செங்குந்தபுரம் கடைவீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளதா? என்பதை பார்வையிட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடுகளை பிரித்து...
முதற்கட்ட விசாரணையில், முதலில் பவுனம்மாள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடிய மர்ம நபர்கள், பின்னர் சக்தி செல்வராஜ் வீட்டிற்கு பின்பக்கமாக வந்து ஓட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீட்டின் மேற்கூரையில் நெருக்கமாக ரீப்பர் இருந்ததால், ஓட்டை பிரிக்கும் முயற்சியை கைவிட்டு, முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றுள்ளனர், என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பலமுறை அறிவுறுத்தியும், தகவல் தெரிவிப்பதில்லை. ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும்பாலும் பூட்டியிருக்கும் வீட்டில் மட்டுமே திருட்டு நடக்கிறது. தெருக்களில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், என்றும் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story