விவசாய சோலார் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம் மானியம்


விவசாய சோலார் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம் மானியம்
x
தினத்தந்தி 18 July 2021 11:34 PM IST (Updated: 18 July 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

விவசாய சோலார் மின் இணைப்புக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.3 லட்சத்தை மானியமாக வழங்குகிறது என்று கலெக்்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை,

விவசாய சோலார் மின் இணைப்புக்கு மத்திய, மாநில அரசுகள்  ரூ.3 லட்சத்தை மானியமாக வழங்குகிறது என்று கலெக்்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஊரக வளர்ச்சித்துறையுடன் இணைந்து தரிசுநிலங்களை சீரமைத்து விவசாயிகளுக்கு விளைநிலங்களாக மாற்றி கொடுத்து வருகிறோம். எனவே விவசாயிகள் வேளாண்மைத்துறையின் மூலம் அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய திட்டங்களை தேவைக்கு ஏற்ப பெற்று ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.

ரூ.3 லட்சம் மானியம்

மத்திய, மாநில அரசுகள் மூலம் விவசாயிகள் சோலார் மின்இணைப்புகளை பயன்படுத்தும் வகையில் ரூ.5 லட்சம் வழங்குகின்றன. இதில் ரூ.3 லட்சம் மத்திய, மாநில அரசு மானியமாக வழங்குகிறது. விவசாயிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சம் மட்டுமே. எனவே விவசாயிகள் சோலார் மின்இணைப்பை பயன்படுத்தும் போது அரசு மானியமும் கிடைக்கின்றது. நாம் திட்டமிட்டபடி விவசாயப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளலாம்.
அதேபோல் மீன்வளத்துறை மூலம் தேவையான அளவு மீன்குஞ்சுகள், மற்றும் மானியத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயம் இல்லாத மற்ற காலத்தில் இணைத்தொழிலாக பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்தால் 6 மாதத்தில் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை லாபம் பெற்று பயன்பெறலாம். எனவே அரசு வழங்கும் பல்வேறு மானியத்திட்டங்களையும் பெற்று பயன்பெற வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மின்பகிர்மான கழக மாவட்ட முதன்மைப்பொறியாளர் சகாயராஜ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேசன், வேளாண்பொறியியல் துறை செயற்பொறியாளர் விஜய்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா, உழவர் உற்பத்தியாளர்கள் குழு இயக்குனர்கள் சேங்கைமாறன், ராமலிங்கம், வேளாண்மைத்துறை துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், தனபால், கதிரேசன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story