வால்பாறையில் படகு இல்லத்தை உடனடியாக திறக்க வேண்டும்
வால்பாறையில் மூடப்பட்டு இருக்கும் படகு இல்லத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் மூடப்பட்டு இருக்கும் படகு இல்லத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
மலைப்பிரதேசமான வால்பாறையில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வால்பாறையில் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகிறார்கள்.
இங்குள்ள கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், பயணிகள் ஆற்றின் ஓரத்தில் நின்று அதன் அழகை ரசித்து விட்டு செல்கிறார்கள்.
படகு இல்லம்
அதுபோன்று சோலையார் அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்து இருப்பதால், அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அணையில் கடல் போன்று தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்து ரசிப்பதுடன், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க வால்பாறை புதிய பஸ்நிலையம் அருகே நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கப் பட்டது. இந்த இல்லம் கடந்த சில மாதங்களுக்கு பிறகு திறக்கப் பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மூடப்பட்டது.
வீணாக கிடக்கிறது
தற்போது இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தா லும் படகு இல்லத்தை திறக்க முன்வரவில்லை. இதன் காரணமாக இங்கு இருக்கும் 20 படகுகள் அனைத்தும் வீணாக கிடக்கிறது.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
வால்பாறை பகுதியில் கூழாங்கல் ஆறு தலைசிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. ஆனால் கனமழை காரணமாக இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறந்த பொழுதுபோக்காக படகுஇல்லம்தான் இருக்கிறது.
திறக்க வேண்டும்
ஆனால் அந்த படகு இல்லத்தை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பலர் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை நீடித்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து திறக்கப்படாமல் இருக்கும் படகு இல்லத்தை உடனடியாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story