விவசாயிகள் தர்ணா
நெல் மூட்டைகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கண்டித்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கரூர்
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து தாராபுரத்தில் உள்ள தனியார் அரவை ஆலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை 2 லாரிகள் வந்துள்ளன. கரூர் அருகே உள்ள சுக்காலியூர் ரவுண்டானா அருகே வந்தபோது அங்கு பணியில் இருந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த 2 லாரிகளையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். பின்னர் அந்த லாரிகளை பறிமுதல் செய்து கரூர் தொழிற்பேட்டையில் உள்ள வாணிப கிடங்கிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த வியாபாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேற்று காலை நேரில் சந்தித்து நீதிமன்ற அனுமதி கடிதம் மற்றும் ஜி.எஸ்.டி. ரசீதுகளை காண்பித்து உரிய ஆவணங்கள் இருப்பதாகவும், லாரிகளை விடுவிக்குமாறும் கேட்டுள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் அந்த லாரிகளை விடுவிக்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் உடனடியாக உரிய ஆவணங்கள் உள்ள லாரிகளை விடுவிக்ககோரி நேற்று இரவு கரூர் தொழிற்பேட்டை வாணிப கிடங்கு கேட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story