சேலத்தில் அரசு பஸ்சில் மகளிர் இலவச டிக்கெட்டை கொடுத்து வடமாநில வாலிபர்களிடம் கட்டணம் வசூல்-கண்டக்டர் பணி இடைநீக்கம்
சேலத்தில் அரசு பஸ்சில், மகளிர் இலவச டிக்கெட்டை வட மாநில வாலிபர்களுக்கு கொடுத்து கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்:
சேலத்தில் அரசு பஸ்சில், மகளிர் இலவச டிக்கெட்டை வட மாநில வாலிபர்களுக்கு கொடுத்து கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இலவச பயணம்
தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இலவசமாக பயணம் செய்பவர்களை கணக்கிட வசதியாக ‘மகளிர் கட்டணம் இல்லா பயணச்சீட்டு’ என்று அச்சிடப்பட்டு டவுன் பஸ்சில் பயணிக்கும் பெண்களுக்கு கண்டக்டர்கள் அந்த டிக்கெட்டை கொடுத்து வருகிறார்கள். இந்த சலுகையை வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பான்மையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சேலம் ஜங்ஷனில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு 13-ம் எண் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஆண்கள், பெண்கள் பலர் பயணித்தனர். 5 ரோடு பகுதியில் அந்த பஸ்சில் டிக்கெட் பரிசோதகர்கள் ஏறி, பயணிகளின் டிக்கெட்டை சோதனை செய்தனர்.
பீகார் வாலிபர்கள்
பஸ்சில் பயணம் செய்த பீகாரை சேர்ந்த வாலிபர்களிடம் பரிசோதனை செய்த போது, அவர்களிடம் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படும் ‘மகளிர் கட்டணம் இல்லா பயணச்சீட்டு’ இருப்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பஸ் கண்டக்டர் நவீன்குமாரிடம் டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண்களுக்கான இலவச பயண டிக்கெட்டை பீகார் வாலிபர்கள் 21 பேரிடம் கொடுத்து அதற்கு கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
பணி இடைநீக்கம்
இதையடுத்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் லட்சுமணன், கண்டக்டர் நவீன்குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. நிர்வாக வசதிக்காக ‘மகளிர் கட்டணம் இல்லா பயணச்சீட்டு’ அச்சடிக்கப்பட்டு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த டிக்கெட்டை, பீகாரை சேர்ந்த வாலிபர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் கொடுத்து கண்டக்டர் கட்டணம் வசூல் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கண்டக்டர் நவீன்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்றார்.
Related Tags :
Next Story