சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ‘லிப்டில்’ சிக்கி தவித்த கர்ப்பிணி-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ‘லிப்டில்’ சிக்கி தவித்த கர்ப்பிணி-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 19 July 2021 3:22 AM IST (Updated: 19 July 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த கர்ப்பிணியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் சிக்கி தவித்த கர்ப்பிணியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
நிறைமாத கர்ப்பிணி
சேலம் ஆடையூர் வெள்ளக்கரடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி (வயது 27). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவருடன் வந்தார். பின்னர் மகப்பேறு பிரிவுக்கு லிப்டில் சென்றார்.
பரிசோதனை முடிந்த பிறகு, பிரசவத்திற்காக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதியாகும்படி டாக்டர்கள் கூறினர். சாப்பாடு வாங்குவதற்காக கருப்பண்ணன் மனைவியை விட்டு விட்டு வெளியில் சென்றார்.
‘லிப்டில்’ சிக்கினார்
பின்னர் சாவித்திரி மட்டும் லிப்டில் ஏறி கீழே வந்தார். லிப்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். தரைத்தளத்திற்கு வந்ததும் லிப்டை திறக்க முயன்றார். ஆனால் லிப்ட் திறக்க வில்லை. இதனால் உள்ளே சிக்கி தவித்த அவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கடப்பாறையை கொண்டு லிப்டின் கதவை சிறிதளவு திறந்து அதில் சிக்கி தவித்த சாவித்திரியை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவசர கால மீட்பு கருவி மூலம் லிப்டின் கதவை முழுவதுமாக திறந்தனர். பிரசவத்திற்கு வந்த பெண் லிப்டில் சிக்கி கொண்ட சம்பவத்தால் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story