விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்-போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 19 July 2021 3:33 AM IST (Updated: 19 July 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

ஏற்காடு:
விடுமுறை தினத்தையொட்டி ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளு, குளு சூழலை அனுபவிக்க சேலம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சுற்றுலா செல்வது வழக்கம். இந்தநிலையில் விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 
அவர்கள் சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட் ஆகிய பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, படகு இல்லம் ஆகியவை கொரோனா பரவல் காரணமாக திறக்கப்படாத நிலையில் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் வியூ பாய்ண்ட்களுக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
கோடை விழாவுக்கு வருவது போன்று ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குறைந்த அளவு போலீசாரே பணியில் இருந்ததால், போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் அவர்கள் திணறினர்.
இதனிடையே ஏற்காட்டில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மாலை 3 மணிக்கு மேல் கடும் பனி மூட்டமும் நிலவியது. இந்த சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு சுற்றுலா பணிகள் சாலையோர கடைகளிலும், ஓட்டல்களிலும், மிளகாய், வாழைக்காய் பஜ்ஜிகளை சூடாக சுவைத்தனர். 
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக ஏற்காட்டில் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story