தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் கலெக்டரிடம் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வாரம் தோறும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். அதன்படி நேற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர். நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று மனுக்கள் பெட்டியும், அலுவலகத்தின் வெளி கேட் அருகே கொண்டு வந்து வைக்கப்பட்டது. இதனால் வெளியில் நின்றபடியே மக்கள் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
கோவில்பட்டி லிங்கம்பட்டி பஞ்சாயத்து கலைஞர் நகர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் சாலைக்காக உள்ள இடத்தில் சிலர் சிலை வைத்து உள்ளனர். எங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி கிடைக்கும், சாலைக்கான இடத்தில் உள்ள சிலையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கோவில்பட்டியை சேர்ந்த காளியம்மாள் (வயது 50) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது 17 வயதான இளையமகனை திருநங்கைகள் சிலர் கடத்தி சென்று விட்டனர். மகனை திருநங்கையாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆகையால் எனது மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்து முன்னணி
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வரும் அரசு நிலத்தில் சட்டத்துக்கு புறம்பாக பள்ளி நிர்வாகம் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்க முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், ஆலயம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது தூத்துக்குடி தாசில்தாரும் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் ஆலயம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஆகையால் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். தற்போது கொரோனா 2-வது அலை தாக்கம் குறைந்து வருகிறது. விரைவில் 3-வது அலை தாக்கம் வரலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இதனால் 3-வது அலை வருவதற்கு முன்பு அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும். கிராமம் தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
சுகாதார சீர்கேடு
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பொட்டலூரணி அருகே உள்ள வடக்கு காரசேரியில் மீன் எண்ணெய் மற்றும் மீன் உணவு தயாரிக்கும் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்துக்கு தேவையான அழுகிய மீன்கள் உள்ளிட்டவற்றை பொட்டலூரணி வழியாக எடுத்து செல்கின்றனர். அதே போன்று ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வயல்வெளி, வாய்க்கால், குளங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நிறுவனத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story