தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை
கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்்தனர். இதையடுத்து தூத்துக்குடியில் மூடப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டு மக்களின் நலன் கருதி ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தொடர்ந்து ஆலை திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோடு அருகே திரண்டனர். அங்கிருந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டபடி நடந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமாபாபு, கிருஷ்ணமூர்த்தி, அரிராகவன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், கிதர்பிஸ்மி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வேல்ராஜ், மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
நிரந்தரமாக அகற்ற வேண்டும்
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஆலையை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, கூடுதலாக 6 மாதம் திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் இந்த முயற்சியை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி தூத்துக்குடி மாவட்ட மக்களை காக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
மேலும் சிறப்பு சட்டம் இயற்றி ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போலீசார் குவிப்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மனு கொடுக்க திரண்டு வந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், கோபி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.
மேலும் கலவர தடுப்பு போலீசார் மற்றும் வஜ்ரா வாகனம் உள்ளிட்டவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காட்சி அளித்தது.
Related Tags :
Next Story