சாலையோரம் வீணாகி கிடக்கும் தடுப்புகள்
சாலையோரம் வீணாகி கிடக்கும் தடுப்புகள்
போடிப்பட்டி
மடத்துக்குளம் போலீஸ் நிலையம் அருகில் கலால் துறை சோதனைச் சாவடியில் நிரந்தரமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தவிர்க்கவும், வாகன சோதனை மேற்கொள்ளவும் ஆங்காங்கே சாலைத்தடுப்புகள் வைக்கப்படுகிறது. இவ்வாறு சில இடங்களில் தற்காலிகமாக வைக்கப்படும் தடுப்புகள் சிறிது காலத்துக்குப் பிறகு சாலையோரம் வீசப்படுவதால் வீணாகி வருகிறது.
எனவே இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவதுகோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பகுதியில் ஒருசில இடங்களில் சாலைத் தடுப்புகள் வைக்கப்படுகின்றன.குறிப்பாக ஏதாவது ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் சில மாதங்களுக்கு சாலைத் தடுப்புகள் வைக்கப்படுகிறது.ஆனால் இதுகுறித்து முறையான அறிவிப்புப் பலகை எதுவும் வைக்கப்படாததால் சில நேரங்களில் விபத்தைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட தடுப்புகளே விபத்துக்குக் காரணமாகி விடுகிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் இந்த சாலைத்தடுப்புகள் சாலையோரங்களில் வீசப்படுகிறது.இதனால் இவை துருப்பிடித்து வீணாவதுடன் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு காரணமாகிறது. பெரும்பாலும் இதுபோன்ற சாலைத் தடுப்புகள் தனியார் வணிக நிறுவனங்கள் விளம்பரத்துக்காக இலவசமாகவே செய்து கொடுக்கின்றன. இலவசமாகக் கிடைப்பதால் அவற்றைப் பாதுகாப்பதில் அலட்சியப்போக்கு நிலவுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.எனவே தடுப்புகளைப் பாதுகாப்பதுடன் மிகவும் அவசியமானால் தவிர தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பு அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story