எர்ரப்பட்டியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: 7 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
எர்ரப்பட்டி கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 7 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தர்மபுரிக்கு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாப்பாரப்பட்டி:
எர்ரப்பட்டி கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 7 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் தர்மபுரிக்கு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் கெயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அங்குள்ள குழாய்கள் சேமிப்பு கிடங்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்க நிறுவனர் ஈசன் தலைமை தாங்கினார்.
இதில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து பாலக்கோடு தாசில்தார் அசோக்குமார், கெயில் நிறுவன பொதுமேலாளர் சங்கர், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அப்போது கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை விளைநிலங்கள் வழியாக பதிக்காமல் சாலையோரமாக பதிக்க வேண்டும். எர்ரப்பட்டி கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும். மேலும் குழாய்கள் கொண்டுவந்து இறக்குவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தார் அசோக்குமாரிடம் வழங்கினர். பின்னர் கிடங்கு முன்பு அமர்ந்து அவர்கள் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் கோரிக்கைகளை ஏற்காததால் விவசாயிகள் வாகனங்களில் ஏறி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவுவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குறுதி
இதையடுத்து அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விவசாயிகள் நடத்திய காத்திருக்கும் போராட்டத்தையொட்டி எர்ரப்பட்டி மற்றும் கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story