அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் குடியிருப்பை சுற்றி தேங்கியிருந்த கழிவுநீரை சொந்த செலவில் வெளியேற்றிய பொதுமக்கள்


அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் குடியிருப்பை சுற்றி தேங்கியிருந்த கழிவுநீரை சொந்த செலவில் வெளியேற்றிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 July 2021 10:32 PM IST (Updated: 19 July 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் குடியிருப்பை சுற்றி தேங்கியிருந்த கழிவுநீரை சொந்த செலவில் பொதுமக்கள் வெளியேற்றினர்.

விழுப்புரம், 

நோய் பரபவும் அபாயம்

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் ஊராட்சியில் கடந்த 1988-ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறைமூலம் 124 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி குடியிருப்புகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் செல்வதற்கு வசதியாக வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மற்றும் காலிமனையிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைத்து தருவதோடு சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

பொதுமக்களே அகற்றினர்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அப்பகுதியில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து குடியிருப்புகளை சுற்றிலும் குட்டைபோல் தேங்கியது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அதிகாரிகளை நம்பி எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றும் தங்கள் குடியிருப்பு பகுதிகளை தாங்களே சுத்தம் செய்வது என்றும் முடிவெடுத்தனர். இதற்காக அப்பகுதி பொதுமக்கள், தங்கள் சொந்த செலவில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குடியிருப்புகளை சுற்றிலும் குட்டைபோல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இனிமேலாவது எங்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க வடிகால் வாய்க்கால் வசதி அமைத்துக் கொடுப்பதோடு, சாலையையும் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story