வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற 3 சிறுவர்கள் கைது


வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற 3 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 19 July 2021 10:37 PM IST (Updated: 19 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம்
பல்லடம் அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தகராறு
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வீரபாண்டி திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் திலகர். இவருடைய மகன் பிரவீன் என்கின்ற பிரவீன் ராஜா வயது 20. இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பனியன் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் பிரவீன்ராஜா, கெம்பேநகரில் உள்ள தனது நண்பர்களான ஜஸ்டின், பிரதீப் ஆகியோரை பார்க்க முடிவு செய்தார். அதன்படி கெம்பே நகருக்கு நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு சென்றார். பின்னர் அங்கு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு  அங்குள்ள ஒரு கடையில் காளான் ஸ்பிரை வாங்கி நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
 அப்போது பிரதீப்புக்கு அறிமுகமான சிறுவர்கள் 3  பேர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.  ஏற்கனவே செல்போன் பார்ப்பது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரதீப்பிடம் கூறுவதற்காக அவர்கள் வந்துள்ளனர். பின்னர் பிரச்சினை குறித்து பிரதீப்பிடம் கூறிக்கொண்டிருக்கும் போது இதுக்கெல்லாமாடா சண்டை போடுவீர்கள் என பிரவீன் ராஜா கேட்டுள்ளார். அதற்கு சிறுவர்கள் உன் வேலையை பாருடா என மரியாதை இல்லாமல் பேசி உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
கொலை
அப்போது சிறுவர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் ராஜாவின் நெஞ்சில் குத்தி உள்ளான். இதனால் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதைப் பார்த்த அந்த 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிரவீன் ராஜாவின் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேர்ந்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீன்ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று பிரவீன் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். 
 இந்த கொலைதொடர்பாக பிரவீன் ராஜா நண்பர் ஜஸ்டின் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து  இன்ஸ்பெக்டர் பொறுப்பு ராஜேஷ் கண்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், செந்தில் பிரபு, தலைமையில் போலீசார் அந்த சிறுவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பல்லடம் பனப்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  வந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை  செய்தனர்.
 3 சிறுவர்கள் கைது
விசாரணையில் அவர்கள் பிரவீன் ராஜாவை குத்திக்கொன்ற 14 வயது உடைய சிறுவர்கள் 2 பேர் மற்றும்,   15 வயது உடைய சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து  3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து  திருப்பூர் முதன்மை நடுவர் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் படுத்தினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர்கள் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த மையத்தில் சேர்க்கப்பட்டனர். 

Next Story