திண்டிவனம் அருகே பஸ்சை இயக்கியபோது மாரடைப்பால் டிரைவர் சாவு
டிரைவர் சாவு
திண்டிவனம்,
சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. பஸ்சை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பருவதராஜகுல தெருவை சேர்ந்த அசோக்குமார்(வயது 57) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி சாலையில் கொள்ளார் கிராமம் வந்தபோது, சாப்பிடுவதற்காக அசோக்குமார் சாலையோரம் உள்ள ஒரு ஓட்டலில் நிறுத்தினார். பின்னர் சாப்பிட்டு முடித்தவுடன் அசோக்குமார் பஸ்சை திருவண்ணாமலை நோக்கி இயக்க முயன்றார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, டிரைவர் இருக்கையில் சாய்ந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கண்டக்டர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் அசோக்குமாரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, மாற்று டிரைவர் மூலம் பயணிகளை திருவண்ணாமலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த அசோக்குமாருக்கு பிரபா என்ற மனைவியும், நீத்து பாலா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். சாப்பிட நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் உயிரிழந்தசம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story