32,278 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தேர்வு எழுதிய 32,278 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
கடலூர்,
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இருப்பினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அனைத்து பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மேல் படிப்புக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் முக்கியமானது என்பதால், அதன் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்வுகள் முடிவுகள் அரசு தேர்வுகள் துறை இயக்கத்தால் வெளியிடப்பட்டது.
32,278 பேர் தேர்ச்சி
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 107 அரசுப்பள்ளிகள், 7 ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், 28 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 88 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் 6 சுயநிதி பள்ளிகள் உள்பட மொத்தம் 236 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 793 மாணவர்கள், 16 ஆயிரத்து 485 மாணவிகள் உள்பட மொத்தம் 32 ஆயிரத்து 278 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சில மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று தங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்டனர்.
மேலும், மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணைய தளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான மாணவர்கள்www.tnresults.nic.in. www.dge1.tn.nic.in., www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.inஆகியஇணைய தளம் மூலமாக தங்களது மதிப்பெண் விவரங்களை அறிந்து கொண்டனர்.
Related Tags :
Next Story