வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் விசாரணை


வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் விசாரணை
x
தினத்தந்தி 19 July 2021 11:49 PM IST (Updated: 19 July 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென நேற்று விசாரணை நடத்தினர்.

வாணியம்பாடி

பலகோடி ரூபாய் கையாடல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த 2012, 2013, 2014-ம் ஆண்டில் பல கோடி ரூபாய் கையாடல் செய்ததாக 3 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  வாணியம்பாடி நகராட்சியில் மேலாளராக பணிபுரிந்த சுரேஷ், கணக்காளர் முரளிகாந்த், உதவியாளர் குருசீனிவாசன் ஆகியோர் கூட்டுசேர்ந்து ஊழியர்களின் வைப்பு நிதி, கர்ப்பிணிகளுக்கு வழங்கும் உதவித் தொகை, நகராட்சி நிர்வாகத்திற்காக பயன்படுத்தப்படும் பணம் ஆகியவற்றை கையாடல் செய்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, 2014-ம் ஆண்டு 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் ஒப்புகொண்டனர். அதன்பேரில் 3 பேரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

இந்த நிலையில் தற்போது வாணியம்பாடி நகராட்சியில் மேற்கண்ட 3 நபர்களுடன் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்நிலை கருவூலத்திற்கு சென்று அங்கு, வாணியம்பாடி நகராட்சி சம்பந்தமான அப்போதைய ஆவணங்களை கேட்டு விசாரணை செய்தனர். வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திலும், சார்நிலை கருவூலத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story