மனு கொடுக்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
ஜூலை
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மனு கொடுக்க வந்தவர்கள் சமூக இடைவெளியின்றி நின்றதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டது.
ரத்து
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்ததை தொடர்ந்து அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் அரசு நிகழ்வுகள் மற்றும் தனியார் நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற வில்லை. இதனால் பொதுமக்கள் தங்களின் மனுக்களை கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகரிப்பு
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட் கிழமைகளில் மக்கள் மனுக்களுடன் வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கத்தை விட அதிகமான மக்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் வந்தனர். இவ்வாறு வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், பலர் முக கவசம் அணியாமலும் நீண்ட வரிசையில் நெருங்கி நின்றபடி இருந்தனர். இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காகவே மக்கள் குறைதீர் கூட்டம் போன்றவைகளை அரசு தவிர்த்து வந்தது.
கொரோனா பரிசோதனை
இது போன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றவர்கள் மீது சம்பந்தப்பட்டவர்கள் எந்த எச்சரிக்கையும் செய்யாமல் நிற்கவிட்டது கொரோனா பரவல் முடிவடையாத நிலையில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஒருபுறம் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த நிலையில் மறுபுறம் மனு கொடுக்க வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மனு அளிக்க வந்த இடத்தின் மறு பகுதியில் சுகாதாரத்துறையினர் சார்பில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் பின்னரே மக்கள் மனு அளிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் தொற்று இருந்தால் மட்டும் தகவல் தெரிவிக்கப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story