மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் ஆய்வு


மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 19 July 2021 6:59 PM GMT (Updated: 19 July 2021 6:59 PM GMT)

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்புவனம், ஜூலை.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
அகழ்வாராய்ச்சி பணிகள்
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் சேதமுற்ற சிறிய பெரிய பானைகள், மண்பாண்ட ஓடுகள், சிறுவர்கள் விளையாடும் சில்லு வட்டுகள், தாயக் கட்டைகள், பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், மண்ணால் ஆன விவசாய கருவிகள், பழங்கால கண்ணாடி பாசி மணிகள், சுடுமண் பாசி மணிகள், சுடுமண் உறை கிணறுகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. 
கொந்தகையில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள், தாடை எலும்பு, மற்றும் மண் சட்டிகள், 7 முழு உருவ மனித எலும்புக்கூடுகள், இரும்பினால் ஆன வாள் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகரத்தில் சிறிய, பெரிய நத்தை ஓடுகள், மண்பாண்ட ஓடுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பெரிய பானைகள், சுடுமண் உறை கிணறுகள் உள்பட பல பொருட்கள் எடுக்கப்பட்டது. 
பார்வையிட்டார்
இந்த அரிய வகை பொருட்களை பொதுமக்கள் பார்ைவயிட வசதியாக அருங்காட்சியம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று (திங்கள்) மாலை மத்திய தொல்லியல் துறையின் மண்டல இயக்குனர் முனைவர் மகேஸ்வரி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்டு பொருட்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். 
மேலும் அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றியும், பொருட்கள் குறித்து முறையாக எழுதி பராமரிக்கவும் தொல்லியல் அலுவலர்களை கேட்டுக்கொண்டார். 
இந்த ஆய்வின்போது மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் வல்லுனர் சேரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணு பிரிவு தலைவர் குமரேசன் மற்றும் தொல்லியல் பிரிவு அதிகாரிகள் பலர் உடன் சென்றனர்.

Next Story